சென்னை: டோவினோ தாமஸின் ‘ஏஆர்எம்’ (அஜயந்தே ரண்டாம் மோஷனம்) மலையாள திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – “வானத்தை பிளந்துவிட்டு வந்த விண்கல்லு, மின்னல விட அதிக வெளிச்சமா இங்க வந்து விழுந்துச்சு” என்ற வசனத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். 3 கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். பெரும்பாலும் இருளில் படமாக்கப்பட்ட காட்சிகள் படத்தின் பிரமாண்டத்தை உணர்த்துகின்றன. 3டியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு காட்சிகள் நியாயம் சேர்க்கும் என தெரிகிறது.
ஆனால், ட்ரெய்லரின் 90 சதவீத காட்சிகள், சண்டைக்காட்சிகளாகவே உள்ளது. சில காதல் காட்சிகள் இடையில் வந்து செல்கின்றன. கதையின் போக்கை விவரிக்காத ட்ரெய்லர் முடியும்போது, காட்சிகளில் இருக்கும் அழுத்தம், கதையில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி படம் செப்டம்பர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஏஆர்எம்: டோவினோ தாமஸ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘அஜயந்தே ரண்டாம் மோஷனம்’ (Ajayante Randaam Moshanam). பீரியட் டிராமாவாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். கேரளாவில் 1900, 1950 மற்றும் 1990 என வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இப்படத்தின் கதையில் 3 கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். கிருத்தி ஷெட்டி, பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, சிவாஜித் மற்றும் அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
+ There are no comments
Add yours