பிரபலக் கதாநாயகி ஶ்ரீஜா (யாஷிகா ஆனந்த்) படப்பிடிப்புக்காக ஏற்காட்டில் வந்து முகாமிடுகிறார். அவரை நேர்காணல் எடுக்க வருகிறார் உள்ளூர் யூடியூபர் ( முத்துக்குமார்). ஒரே சீராகத் தொடங்கும் நேர்காணல் திடீரென அனல் மோடுக்குப் போய்விடுகிறது. அதற்குக் காரணம் முத்துக்குமார் ஆபாசமான கேள்விகள். ஹீரோயினுக்கும் யூடியூபருக்குமான வாக்குவாதம் முற்றிக் கைகலப்பில் முடிகிறது. யூடியூபர் என்கிற போர்வையில் அங்கே வந்தவர் கதாநாயகியை தாக்கியதில் அவர் கீழே விழ, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயல்கிறார். அப்படியொன்று நடந்துவிடக் கூடாது என்று தடுக்க வந்த அந்த விடுதியின் ஊழியரையும் கொல்கிறார் அந்த நபர். இதன் பிறகு ஹீரோயின் ஸ்ரீஜாவின் நிலை என்ன? யூடியூபராக வந்தவரின் நோக்கம் என்ன? இந்தச் சந்திப்பின் புள்ளி உண்மையில் எங்கிருந்து தொடங்கியது என்பதை நோக்கிக் கதைப் பின்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.
இளம் பெண்களைக் காதலின் பெயரால் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதைக் காணொளியாக்கி அதைக்கொண்டே அவர்களை மிரட்டிப் பணம் பிடுங்குவது, அப்பெண்களை மீண்டும் மீண்டும் ‘வலைப் பின்னல்’ மனிதர்களுக்குப் பாலியல் இச்சைக்கான பொருளாக்குவது, அதற்கு அதிகாரத்தையும் சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது என வாழும் கொடூரமான கும்பலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் கதை.
எடுத்த எடுப்பிலேயே மூன்று வெவ்வேறு நிகழ்வுகளைக் காட்டி, அவற்றை முன்கதைகளின் வழியாக இணைக்கும் திரைக்கதையில் ஏகப்பட்ட திருப்பங்களை வைத்திருக்கிறார் படத்தை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் செல்வம் மாதப்பன். இயக்குநரின் திறமையான கிராஃப்ட் படத்தைத் தொய்வின்றிக் காண உதவுகிறது. ஆனால், அந்த கிராஃப்ட் பெரும், தரம் தாழ்ந்த சமரசத்துடன் வெளிப்பட்டிருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலகீனம்.
அது, பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்க்கும் ஆண் மைய உலகின் கருப்பாடுகளைத் தோலுரிக்கும் ஒரு படத்தில், அதே பெண்களைக் கவர்ச்சியாகவும் உடலாகவும் சித்தரித்திருப்பது மிக மோசமான முரண். ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்’ என்று ஒருபோதும் இந்தத் தவற்றுக்குச் சமாதானம் சொல்ல முடியாது. இதே கதையைப் பெண்களைச் சதையாகச் சித்தரிக்காமலும் சிறப்பாக எடுக்க முடியும் என்பதற்கு இந்தியில் வெளியான பல படங்களை உதாரணமாகக் கூற முடியும்.
ஸ்ரீஜாவாக நடித்துள்ள யாஷிகா கதாபாத்திரத்துக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பதை அவர் நடித்துள்ள காட்சிகள் நமக்குச் சொல்கின்றன. அவர் எத்தனை தரமிறங்கினாலும் அவரது உழைப்பையும் நடிப்பையும் குறை சொல்ல முடியாது.
துணைக் கதாபாத்திரங்களில் வரும் தர்ஷினி, எதிர்மறைக் கதாபாத்திரத்தில் யூடியூபர் போல் வரும் முத்துகுமார், ஆதவ் பாலாஜி, ஜார்ஜ் மரியான் எனப் பலர் படத்துக்கு வலிமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு உதவும் நாயகனாக வரும் பிரஜின் பங்களிப்பு நன்றாக இருந்தாலும் அது இந்தக் கதைக்குள் வீணாகச் சொருகப்பட்ட பழைய ஆணி.
க்ரைம் த்ரில்லர் கதைக்கு மலையாளத்தின் இனிமையான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெஸ்ஸி கிப்ட் கதையின் போக்குக்கு ஈடுகொடுக்கும் பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். என்றாலும் இந்தக் கதைக்கு இத்தனை பெரிய இசையமைப்பாளர் அவசியமா என்கிற கேள்வி எழாமல் இல்லை.
இசையமைப்பாளருக்கு இணையாக ஒளிப்பதிவாளரின் சிறந்த பங்களிப்பும் 2 மணி நேரத்துக்குள்ளாக இதைக் கத்தரி வைத்துச் சுருக்கிக் கொடுத்த படத்தொகுப்பாளர் மூர்த்தியும் பார்வையாளர்களின் பாராட்டுக்கு உரியவர்கள்.
ஒரு குற்றச் செய்தியின் விடுபட்ட ‘பாலோ அப்’ செய்திகளையும் பின் தொடரும்போதுதான் அதன் பின்னணியில் அமைதியாக உறங்கும் மிருகங்களை அடையாளம் காண முடியும் என்கிற செய்தியை ‘கவர்ச்சி’ என்கிற சமரசத்துடன் கொடுத்திருக்கும் இந்தப் பக்கங்களை 18 வயதைக் கடந்தவர்கள் விழிப்புணர்வு பெற ஒருமுறைத் தராளமாகப் புரட்டலாம்.
+ There are no comments
Add yours