சமீபத்தில் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’. இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை தழுவியது. இரண்டுமே பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ படத்துக்கான விமர்சனங்கள், சர்ச்சைகள் குறித்து சமுத்திரக்கனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “எதிர்பார்ப்பு அதிகமானதால் இப்படி நடைபெறவில்லை. அனைத்துமே வன்மம் தான். இயக்குநர் சிவா எழுதிய படைப்பு ’கங்குவா’. அதை சிவா படைப்பில் சூர்யா நடித்திருக்கிறார் என்று தான் பார்க்க வேண்டும். அப்படி இருந்திருக்கலாம், இப்படி இருந்திருக்கலாம் என்றால் நீங்கள் எடுங்கள். அவர்களுடைய படைப்பை உங்கள் முன் வைத்திருக்கிறார்கள். எனக்கு பிடிக்கவில்லை, பிடித்திருக்கிறது அவ்வளவு தான்.
என்னனென்னவோ நடந்துவிட்டது, இன்னும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தப் படத்துக்கு நடந்தது நம் கண்முன் தெரிந்தது அவ்வளவே. இதற்கு முன்னும் நடந்திருக்கிறது. சில படங்களை ஆரம்பிக்கும் போதே அழித்து விடுகிறார்கள். இது பெரிய பாவம். இந்தப் பாவத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதை வைத்து தானே சம்பாதிக்கிறார்கள். சினிமாவை இவ்வளவு அசிங்கப்படுத்தி, அருவருப்பாக பேசி சம்பாதிப்பது எதுவுமே நிக்காது. அதை நேர்மையான தொழிலாகவே பார்க்க வேண்டும்.
இங்கு ரசிகர்கள் வேறு, திட்டுபவர்கள் வேறு. இயக்குநர்கள் சங்கத்தில் இது குறித்து ஒரு அறைக்குள் பேசுவோம். ஆனால், ஒவ்வொருவரும் பாதிக்கப்படும் போது தான் அதன் வலி தெரியும். இங்கு ஒற்றுமையில்லை. தெலுங்கு, கன்னடத்தில் இப்படி நடந்தால் அதற்கு வேறு ஒரு விளைவை சந்திக்க வேண்டியதிருக்கும். தமிழில் மட்டுமே இது நடந்துக் கொண்டிருக்கிறது. அதை எல்லாம் மீறி தான் சில நல்ல படைப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. அவையே இதற்கு தான் பதிலாக பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.
+ There are no comments
Add yours