சென்னை: இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று ‘வாழை’ படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது என்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரத்தில் ‘வாழை’ படம் வெளியானது. சிறுவயதில் தன்னை பாதித்த சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்தக் கதையை படமாக்கி இருக்கிறார் மாரிசெல்வராஜ். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பாலா உள்ளிட்டப் பல பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
படத்தில் ரஜினி-கமல் ரசிகர்களின் தருணங்களை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருந்தார். மேலும், வாழைத்தார் சுமப்பவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, சாதி எனப் பல விஷயங்களை இந்தப் படம் பேசியிருந்தது. பாராட்டுகள் கிடைத்த அதே சமயம் படம் சுற்றி பல விவாதங்களும் எழுந்தது.
இன்று நடிகர் விஜயின் ‘GOAT’ படம் வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் விஜயின் படம்தான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும் தன்னுடைய ‘வாழை’ படம் திரையரங்குகளில் இன்று ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற புகைப்படத்தை மாரிசெல்வராஜ் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இயக்குநர் மாரிசெல்வராஜ் சிறுவயதில் தான் நடிகர் விஜயின் ரசிகர் எனவும், அவரை வைத்து இயக்க முன்பொரு முறை கதை சொல்லி இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours