சென்னை: கல்வியை தடுப்பது கடவுளாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும்படம்தான் ‘சார்’. ’கன்னிமாடம்’ படத்திற்குப் பிறகு நடிகர் போஸ் வெங்கட் இரண்டாவதாக இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், சாயா தேவி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
மாங்கொல்லை ஊரில் 1960- 1980களில் நடக்கும் கதைதான் இந்த ‘சார்’. அந்த ஊரில் உயர்சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன், ஊரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று முன்னேறக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதோடு சாதிப்பெருமையும் சேர்ந்து கொள்ள கடவுள் பக்தியை அந்த ஊர் மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார். அந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தை இடிக்க வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதை எதிர்த்து அந்த ஊருக்கு வரும் அண்ணாதுரை வாத்தியார் அந்த ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து கல்வி போதிக்கிறார். அவர் ஆரம்பித்த ஆரம்பப்பள்ளியை மகன் சரவணன் நடுநிலைப்பள்ளியாக்குகிறார். சரவணன் மகன் விமல் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கி அந்த ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் அந்த ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாகவே நிற்கிறது. இதை எதிர்த்து அந்த ஊர் மக்கள் எப்படி முன்னேறுகிறார்கள்? அவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கிறது என்பதுதான் ‘சார்’ படத்தின் கதை.
படத்தில் ஞானம் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் விமல். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சரவணன், சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இனியன் ஹாரிஸூடைய ஒளிப்பதிவும், சித்துகுமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். கல்வி பெற்றால் ஒரு சமூகம் முன்னேறும் என்ற விஷயத்திற்கு சாதி பெருமையும், கடவுள் பெயரிலான மூடநம்பிக்கையும் எப்படி தடையாக இருக்கிறது என்பதையே படத்தில் சொல்ல வருகிறார்கள். ஆனால், அது திரைக்கதையில் இருந்து படமாகி இருக்கும் விதம் பயங்கரமான சறுக்கலை சந்தித்திருக்கிறது.
சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம்தான் சொதப்பல். இடைவேளை வரையிலுமே கதைக்கரு நேர்க்கோட்டில் பயணிக்காமல் எங்கெங்கேயோ பயணிப்பது பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது. தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை அந்த ஊர்மக்களுக்கு கல்வியறிவு தருகிறார்கள் எனும்போது அந்த ஊரில் ஒருவர் கூட அந்தக் கல்வியால் பயன்பெறவில்லையா? ஊரில் என்ன விஷயம் மாறியிருக்கிறது போன்றவை அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை. படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரமும் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
’ஒடுக்கப்பட்டவங்க மேல வராம இருக்க நீங்க முதல்ல கைவைக்கற இடம் கல்விதானே?’, ’பள்ளிக்கூடத்தை அழிச்சிட்டா கல்வியை அழிக்க முடியும்னு நினைக்கறீங்களா?’ போன்ற வசனங்கள் ஷார்ப். முதல் பாதியில் சொதப்பியிருக்கும் படம் இரண்டாம் பாதியில் அதை ஓரளவு சரிசெய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இந்த ’சார்’ படம் எடுத்துக் கொண்ட கதையை வலுவாக சொல்ல தடுமாறி பார்டரில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.
+ There are no comments
Add yours