தீபாவளி படங்களில் முன்பதிவில் முந்துவது யார் ?

Spread the love

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’, ஆகிய தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதை தவிர்த்து, தெலுங்கில் உருவான துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் வெளியாகிறது.

அமரன்: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முன்பதிவு சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் இது ‘கரியர் பெஸ்ட்’ முன்பதிவாக இருக்கும் என கூறப்படுகிறது.

பெரும்பாலான திரையரங்குகளில் படம் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு இது சிறந்த ஓப்பனிங் என கூறப்படுகிறது. முன்னதாக, 2022 தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் வெளியாகி தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘அமரன்’ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும், தீபாவளிக்கு அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் நல்ல புக்கிங்கையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதர்: எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘பிரதர்’. பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அக்கா – தம்பி பாசத்தையும், நகைச்சுவையையும் மையமாக வைத்து உருவான இப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. குறைவான திரைகளே இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையின் பிரதான திரையரங்குகளில் காலை 9 மணி காட்சிகள் ‘அமரன்’ படத்துக்கு ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், 12 மணிக்கு பிறகான காட்சிகளையே சென்னையின் மையப்பகுதியில் உள்ள திரையரங்குகளில் காணப்படுகிறது. புறநகர் பகுதிகளில் 9 மணி ஓப்பனிங் காட்சிகள் உள்ளன. மேலும் ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.

ப்ளடி பெக்கர்: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படத்தில் கவினின் யாசகர் போன்ற தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் காட்சிகள் படம் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் நகரும் கதைக்களத்தை கொண்டது என்பதை உறுதி செய்துள்ளன.

இருப்பினும் தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் முன்பதிவை பொறுத்தவரை ‘பிரதர்’ படத்துக்கு அடுத்தபடியாக குறைவான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மிகச் சொற்பமான திரைகளில் மட்டுமே ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதாக தெரிகிறது. மற்றபடி புக்கிங் மந்தமான நிலையில் தான் உள்ளது. 3 தமிழ் படங்களையும் பொறுத்தவரை படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு மற்றும் விமர்சனங்களின் அடிப்படையில் காட்சிகளின் எண்ணிக்கை கூடுதலாகவோ, குறவாகவோ அமையும் என்பதில் மாற்றமில்லை.

3 தமிழ் படங்கள் வெளியாக உள்ளதால், தெலுங்கில் உருவான துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்துக்கு சென்னையில் பிரதான திரையரங்குகளில் ஒன்று அல்லது இரண்டு திரைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours