சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ள ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற நவீன கண்காட்சியகத்தை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், திரைப்பட நடிகர்கள் சூரி மற்றும் அஜய் ரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும் கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவ சிலை அருகில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சேகர்பாபு மற்றும் திரைப்பட நடிகர்கள் சூரி, அஜய் ரத்னம் ஆகியோர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, “தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள். ஒருவரின் பிறந்தநாளை ஒரு நாள் கொண்டாடலாம் ஆனால் ஒரு வருடம் கொண்டாடி வருவதற்கு தகுதியானவர் கலைஞர் தான். கலைஞரின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டமாக தான் அமைந்தது.
நான் உட்பட பல பேர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றில் தெரியாத பல தகவல்களை இந்த கண்காட்சியகத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த கண்காட்சியகம் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.
நவீன தொழில்நுட்பத்தில் கலைஞரின் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் அவருடன் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த அனுபவத்தை கொடுக்கிறது. பூமி இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும்” என்றார்.
‘கருடன்’ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பியபோது, “இளைஞர்கள் பெண்கள் என குடும்பங்கள் சேர்ந்து ’கருடன்’ திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ’விடுதலை’ இரண்டாம் பாகம் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது. அதற்கும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் சூரியை மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் திரையில் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய போது, “நான் நடிகன். எனவே, எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் நான் நடிப்பேன்” என்றார்.
+ There are no comments
Add yours