நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்துக்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி, விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று மரியாதை செய்துவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் குறித்து பலரும் பேசிவிட்டனர். என்னால் அவரது இறப்புக்கு வர முடியவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் இருந்தேன். படக்குழு சார்பாக படப்பிடிப்பு தளத்தில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினோம். சினிமாவில் எப்படி நல்ல மனிதராகவும், மக்களுக்கு நல்லவராகவும் இருந்தாரோ, அப்படியே நிஜத்திலும் வாழ்ந்துவிட்டு சென்றார்.
வாழ்ந்தால் இவரைப்போல வாழ வேண்டும் என்பதை பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். ‘என்னத்த சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம். நாலு பேர் வாழ்த்தும் வகையில் வாழ வேண்டும்’ என மேடையில் சொன்னதைப்போல வாழ்ந்து காட்டிவிட்டியவர் விஜயகாந்த். அவருடன் ‘தவசி’, ‘பெரியண்ணா’ போன்ற படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. அவருடன் படப்பிடிப்பு தளத்தில் நான் இருந்திருக்கிறேன் என்பதே பெருமைதான். காலம் முழுவதும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார்” என்றார்.
+ There are no comments
Add yours