ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜெ.எம். பஷீர் & எம்.டி சினிமாஸ் திரு. ஏ.எம் சௌத்ரி தயாரிக்க பான் இந்தியா திரைப்படத்தில் இயக்குநர் மா.வெற்றியின் இயக்கத்தில் ஹீரோவாக ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் நடிக்கிறார்.
விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பை வெளியிடும்விதமாகப் படக் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் தயாரிப்பாளர் ஜெ.எம். பஷீர் பேசும்போது, “நான் தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர் படத்தில் நடித்துள்ளேன். விரைவில் அப்படம் திரைக்கு வரவுள்ளது. நானும், என் நண்பர் சௌத்ரியும் இணைந்து மாஸ்டர் பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்சன் படம் எடுக்க வேண்டும் எனப் பல காலமாகப் பேசி வந்தோம்.
இந்தியாவில் உருவான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., போன்ற படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது. உலகளவில் இந்திய சினிமாவை அறிய வைத்தவர். அவரை கௌரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் நானும் நண்பர் சௌத்ரியும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளோம். படம் மிகப் பெரும் பொருட்செலவில் முன்னணி கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. விரைவில் அது பற்றிய தகவல் அனைத்தும் விரைவில் அறிவிப்போம். இப்படத்தைப் பற்றிய செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி..” என்றார்.
எம்.டி. சினிமாஸ் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி பேசும்போது, “எங்களுக்கு இயக்குனர் வெற்றியை ரொம்ப காலமாகத் தெரியும். அவர் மாஸ்டரை கவரும்படி ஒரு கதையைச் சொல்லியுள்ளார். சினிமாவில் உலகளவில் மொழிகள் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்சன் படங்களும், காமெடி படங்களும்தான்.
அந்த வகையில் மாஸ்டரை வைத்து பெரிய ஆக்சன் படம் தயாரிக்கவிருக்கிறோம். முன்னதாக பஷீர் அவர்களுடன் இணைந்து ஒரு படம் தயாரித்தோம். எந்த ஒரு பணியையும் நான் அவருடன் இணைந்து தான் செய்வேன், அவருடன் இணைந்து இப்படத்தைச் செய்யவுள்ளோம். உலகமே வியக்கும் சாதனைகள் செய்த மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படம் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்..” என்றார்.
இயக்குநர் மா.வெற்றி பேசும்போது, “எனக்கு ஹாலிவுட் படங்கள் மீது அதிக விருப்பம். அதே போல ஒரு தமிழ்ப் படம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஒரு கதையை எழுதினேன். இந்தக் கதையில் மாஸ்டர் நடித்தால் நன்றாக இருக்குமென்று அவரை அணுகினேன், என்னிடம் கதை கேட்டார். உடனே நடிப்பதாகச் சொல்லி, படத்திற்காக அவரே நிறைய விசயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்படத்தில் மாஸ்டருடன் இணைந்து வேலை செய்வது மகிழ்ச்சி..” என்றார்.
ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசும்போது, “இயக்குநர் வெற்றி முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார், யார் ஹீரோ என்றேன். நீங்கள்தான் நடிக்கனும் என்றார். நான் முதலில் நடிக்கவில்லை என்றேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். நீங்கள் எத்தனை ஹீரோக்களுக்கு சொல்லித் தந்திருக்கிறீர்கள். உங்களை மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். எனக்கும் சரியென்று தோன்றியது.
முதலில் கதையில் நிறைய மாற்றங்கள் செய்தோம். நான் இதுவரை செய்த வேலைகளில் நேர்மையாக இருந்திருக்கிறேன். இந்தப் படத்திலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றுவேன். சௌத்ரி சார், பஷீர் இருவரும் என்னை முழுமையாக நம்பி வந்துள்ளனர். அவர்களுக்கு வெற்றி தரும் படைப்பாக இப்படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்குவோம். படத்தைச் சிறப்பாகக் கொண்டு வர ஒவ்வொன்றையும் மிக கவனமாகச் செய்யவுள்ளோம்.
இப்படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறேன். இது புதுமையான ஆக்சன் படமாக இருக்கும் இப்படத்தில் நடிக்கத் தனியாகப் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்படம் மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.. தமிழ் சினிமாவில் எல்லா கலைஞர்களுடன் நான் வேலை பார்த்துள்ளேன். அனைவரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக நம்புகிறேன். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.
இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களைப் படக் குழுவினர் அணுகவுள்ளனர். மேலும் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். அது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
+ There are no comments
Add yours