சென்னையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகைகளை திருடிய முன்னாள் மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகர் ஜான். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் (தாசர்) ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்ற கிருபாகர் ஜான், உணவு இடைவேளையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 சவரன் நகை,100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.. இதனை தொடர்ந்து கிருபாகர் ஜான் இக்கொள்ளை சம்பவம் குறித்து, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்து வந்து திருடி சென்றது பதிவாகி இருந்தது.
பின்னர் போலீஸார் சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளத்தை வைத்து திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த சத்யா(20) என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருட்டில் ஈடுபட்ட சத்யா, கிருபாகர் ஜான் ஆசிரியராக பணியாற்றும் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் என்பது தெரியவந்தது. கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையை பிணையில் எடுக்க பணம் தேவை பட்டதால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் போல் உடை அணிந்து சென்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்பதற்காக, உணவு டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்தும் பனியனை போட்டுக்கொண்டு திருடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் முன்னாள் மாணவன் சத்யாவை கைது செய்து அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பள்ளி ஆசிரியரின் வீட்டில் முன்னாள் மாணவனே திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours