‘ஆப்கன் பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு ஏவும் பாகிஸ்தான்’!

Spread the love

ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை, ஜம்மு காஷ்மீருக்கு பாகிஸ்தான் ஏவி வருகிறது என இந்திய ராணுவத்தின் வடக்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த இரு தினங்களாக ரஜோரி மாவட்டத்தின் பாஜிமால் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இரு கேப்டன்கள் உட்பட இந்தியாவின் 5 ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பங்கேற்றார். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர் ”இந்த என்கவுன்டர் நடவடிக்கையின்போது, ​​ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா கமாண்டர் ஒருவர் உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது உட்பட எல்லையோர மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​பகுதிகளில், ஒரு வருடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இது மட்டுமன்றி, பயங்கரவாதிகள் குறித்தான மற்றொரு அதிர்ச்சி தகவலையும் ராணுவ தளபதி வெளியிட்டார். “உள்ளூர் மக்களின் ஆதரவு இல்லாததால், ஆப்கன் பயங்கரவாதிகளை இந்த பகுதிக்குள் தள்ள பாகிஸ்தான் முயற்சிக்கிறது. அந்த பயங்கரவாதிகளை அடையாளம் காண முயன்றபோது, ​​அவர்களில் சிலர் பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்தது” என்று லெப்டினன்ட் ஜெனரல் திவேதி கூறினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க, எதிர்வரும் மாதங்களில் மேலும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளின் உள்ளே செல்லாது மேற்கண்ட விவரங்களை லெப்.ஜெனரல் திவேதி இன்று வெளியிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours