சமூக ஆர்வலர் கொலை வழக்கில் 8 பேரின் ஆயுள் தண்டனை ரத்து!

Spread the love

திருவண்ணாமலையில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் சந்திரா. சமூக ஆர்வலரான இவர், நில அபகரிப்பு, கனிமவளக் கொள்ளை ஆகியவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிங்கமுக தீர்த்தம் அருகே ராஜ்மோகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது அப்போதைய கவுன்சிலராக இருந்த அதிமுகவை சேர்ந்த திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன், அவரது தந்தை காசி என்கிற வீராசாமி, சகோதரர் செல்வம், வெங்கடேசனின் மனைவி மீனாட்சி, முருகன், சடையன், சந்திரசேகரன், ஐயப்பன், விஜயராஜ் மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வீராசாமி, செல்வம் ஆகியோர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், மீனாட்சி, உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் மற்றும் வழக்கறிஞர் ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் ஆஜராகினர். கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ஒருவர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படும் நிலையில், அவரது சாட்சியத்தை அடிப்படையாக வைத்து தண்டனை விதித்தது தவறு என வாதிட்டனர்.

காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது விசாரணையில் குறைகள் இருப்பதாலோ அல்லது தாமதமாக புகார் அளிக்கப்பட்டது என்ற காரணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து அவர்கள் குற்றமற்றவர்கள் என கூற முடியாது என வாதிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆவணங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறி 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours