ஜம்மு – காஷ்மீரில் மஸ்ரத் ஆலம் தலைமையில் இயங்கும் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (எம்எல்ஜேகே) அமைப்பு, நாட்டுக்கு எதிராக பிரிவினைவாத செயல்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், “மஸ்ரத் ஆலமின் எம்எல்ஜேகே அமைப்பு ஜம்மு – காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து, பாகிஸ்தானுடன் சேர்ப்பதையும், ஜம்மு – காஷ்மீரில் இஸ்லாமிய அரசை நிறுவுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. எம்எல்ஜேகே அமைப்பு உறுப்பினர்கள் பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மஸ்ரத் ஆலமின் முஸ்லிம் லீக் ஜம்மு காஷ்மீர் (எம்எல்ஜேகே – எம்ஏ) அமைப்பு, உபா (யுஏபிஏ) சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுகிறது.
இந்த அமைப்பும் அதன் உறுப்பினர்களும் ஜம்மு-காஷ்மீரில் தேச விரோத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, ஜம்மு-காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ மக்களைத் தூண்டுகின்றனர். நமது தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படும் எவரும் விட்டுவைக்கப்படமாட்டார்கள். சட்டத்தின் முழு தண்டனையையும் அவர்கள் எதிர்கொள்ள நேரும் என பிரதமர் நரேந்திர மோடி அரசு அழுத்தமாகவும், தெளிவாகவும் தெரிவிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours