அரக்கோணத்தில் லாரி மோதி 4 வயது சிறுவன் மூளை சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் விண்டர்பேட்டை எம்.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (40). இவர் சோளிங்கரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மோனிஷா. இவர்களது இரண்டாவது மகன் ஜோனத்தான் ராஜ்( 4).
இன்று காலை தாய் மோனிஷாவுடன் இரு சக்கர வாகனத்தில் ஜோனத்தான்ராஜ் சென்றுள்ளார். வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு கடையில் குளிர்பானம் வாங்குவதற்காக அவரது தாய் மோனிஷா கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றார்.
குழந்தை ஜோனத்தான்ராஜை வண்டியிலேயே நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ஜோனத்தான்ராஜ் தாயை நோக்கி ஓடியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஜோனத்தான்ராஜ் மீது மோதியதில் சிறுவனின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவத்தை கண்ட குழந்தையின் தாயும், அங்கிந்த மக்களும் அதிர்ந்து போயினர்.
தன் கண் முன்னே மகன் கோரமாக இறந்ததை பார்த்த மோனிஷா கதறி அழுதார். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். குழந்தையின் உடலை டவுன் போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours