கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நேற்று நக்சல்வாதிகள் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நிலையில், முதுமலை வனப்பகுதியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அயன்குன்று உருப்புகுற்றி வன பகுதியில் நேற்று நக்சல்வாதிகள் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்நிலையில், உள் வனப் பகுதிக்கு தப்பிச் சென்ற நக்சல்வாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடிக்காத நிலையில், பயங்கரவாத எதிப்பு படை டிஐஜி புட்ட விமாதித்ரு கூறியுள்ளதாவது…
“எட்டு பேர் கொண்ட நக்சல்வாதிகள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு உள் வனப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர். இதில், இரண்டு நக்சல் வாதிகளுக்கு காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது உபா சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இந்நிலையில், முதுமலை வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார், முதுமலை வனப் பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில வனப் பகுதிகள் இணையக் கூடிய TRI JUNCTION பகுதியில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours