நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை !

Spread the love

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இங்கு பயிலும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு வழிநடத்த அவர் முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நிர்மலா தேவி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரை கைது செய்திருந்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கடந்த 26ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்திருந்தார். ஆனால் அன்றைய தினம் உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரி நிர்மலாதேவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை ஏற்று 29ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

நேற்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அப்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிரான சாட்சியங்கள் இல்லாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். ஆனால் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இன்று நிர்மலா தேவி மற்றும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நிர்மலா தேவியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி அம்மாள், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலா தேவியை விருதுநகர் சிறையில் அடைப்பதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours