சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (32). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த அக்டோபர் 17ம் தேதி அரும்பாக்கம் போலீஸார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி காலை பெண் சிறை காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கைதி ஜெயந்தியை புழல் சிறையில் உள்ள பார்வையாளர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக பார்வையாளர்கள் அறையை சுத்தம் செய்ய புழல் சிறையில் இருந்து வெளிப்புறமாக வந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிகிறது. அப்போது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த கைதி ஜெயந்தி போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சிறைக்காவலர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவயிடத்திற்கு வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர், பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தியதுடன் கைதி ஜெயந்தி தப்பிச் சென்றது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கைதி ஜெயந்தியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒரு தனிப்படையினர் கர்நாடக மாநிலத்திற்கும் மற்றொரு தனிப்படையினர் புழல் சிறை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பெண் கைதி தப்பிச் செல்ல காரணமான பெண் சிறை வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து புழல் போலீஸார் தப்பியோடிய கைதி ஜெயந்தியின் கணவர் அஜய் பாபுவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெங்களூரு கெங்கேரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து சென்று கெங்கேரி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெயந்தியை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று சிறையில் இருந்து பார்வையாளர்கள் போல் தப்பி சென்ற ஜெயந்தி அங்கிருந்து ஆட்டோவில் கோயம்பேடு சென்றதும் பின்னர் கோயம்பேட்டில் இருந்து பேருந்தில் பெங்களூரு சென்றதும் தெரியவந்தது.
+ There are no comments
Add yours