கோவை அருகே ரெஸ்டாரண்ட்டின் பின்புறம் போலி மதுபானம் விற்பனை செய்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் உட்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தொட்டிபாளையம் பகுதியில் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் அருண் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. சோதனையின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போலி மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து கேரளாவிலிருந்து எரிசாராயம் கடத்தி வந்து, வேதிப்பொருட்களை கலந்து வீட்டில் மதுபானம் தயாரித்து வந்தது தெரியவந்தது.
மேலும் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை பாட்டிலில் அடைத்து பிரபல நிறுவனங்களின் லேபிள்களை ஒட்டி, கோவையில் உள்ள ரெஸ்டாரண்டுகள் மற்றும் தாபாக்களில் விற்பனை செய்து வந்ததோடு, கேரளத்து எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 1,667 மதுபாட்டில்கள், நிரப்பப்படாத 1,745 பாட்டில்கள் மற்றும் 180 லிட்டர் எரி சாராயம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த அனில் குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரெஸ்டாரண்டுகள் மற்றும் தாபாக்களில் போலி மதுபான விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது போலீஸார் இந்த இரண்டு பேரை கைது செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார் என்பவரது தந்தை பாலசுப்பிரமணியம், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours