ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிவைத்து தகர்த்ததை அடுத்து, 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நக்சல்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிங்பும் மாவட்டத்தில் மகாஹாதேவ்சல் மற்றும் போசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ரயில்வே துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் சென்று பார்த்தபோது, சுமார் 2 முதல் 3 மீட்டர் அளவிலான தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவ்வழியாக சென்ற 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ரயில் தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸார் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்த தாக்குதலை மாவோயிஸ்ட் அமைப்பினர் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அதே பகுதியில் பதுங்கி இருக்கிறார்களா என்பது தொடர்பாகவும் தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours