ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ரூ.16.76 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல் போன்கள், லேப்டாப் மற்றும் டேப்களை திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டை, ஆர்.கே சாலையில் தனியார் ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக அனுப்பும் பணியை இந்நிறுவனம் மேற் கொண்டு வருகிறது.
விலையுயர்ந்த பொருட்கள்: இந்நிலையில், வாடிக்கையாளர் கள் ஆர்டர் செய்த ரூ.16 லட்சத்து76 ஆயிரம் மதிப்புள்ள விலை யுயர்ந்த ஆப்பிள் ஐ-போன்கள், லேப்டாப் மற்றும் டேப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் இந்நிறு வனத்தில் திருடு போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாளர் சிவசுப்பிரமணியன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அஜித்(23), திருவேற்காட்டைச் சேர்ந்த சரவணன்(27) ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை அனுப் பாமல் திருடி வெளியே விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 96,500, ஒன்றரை பவுன் தங்க நகை, ஆப்பிள்ஐ-போன் உள்ளிட்ட 5 செல்போன்கள், 1 டேப், மற்றும் 1 வாசிங்மெஷின், 1 டிவி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours