திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்திருந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் கட்டிட தொழிலாளி விக்னேஷ் (36). இவரது மனைவி ரம்யா. இவர்களது மூன்று வயது குழந்தை சஞ்சய், அப்பகுதியிலுள்ள அங்கன் வாடியில் படித்து வந்தான்.
இவர்களது எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் (42) என்ற பெண்ணுக்கும், ரம்யாவுக்கும் இடையே தகராறு இருந்ததால், அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை இல்லை.
அப்பகுதியிலுள்ள பொது குடிநீர் குழாயில் ரம்யா நேற்றுகாலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்திருந்த சஞ்சய், அங்கு விளையாடி கொண்டிருந்தான். பின்னர், மகனைஅங்கன்வாடிக்கு அனுப்ப ரம்யா தேடியபோது காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் தேடினார். ஆனால், சஞ்சய் கிடைக்கவில்லை.
ராதாபுரம் போலீஸில் விக்னேஷ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் அங்குசென்று வீடுவீடாகத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தங்கம்மாளிடம் போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரது வீட்டுக்குள் சென்று தேடினர். அங்கிருந்த வாஷிங் மிஷினுக்குள், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு சஞ்சயின்உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விபத்தில் மகனை இழந்தவர்: தங்கம்மாளை பிடித்து போலீஸார் விசாரித்தனர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனும் அங்குசென்று விசாரணை மேற்கொண்டார். சமீபத்தில் விபத்து ஒன்றில் தனது மகன் உயிரிழந்ததால் தங்கம்மாள் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
எதிர்வீட்டில் வசிப்பவர்கள் குழந்தையுடன் வசிப்பதை கண்டு ஆத்திரமடைந்த தங்கம்மாள், சிறுவன் சஞ்சயை சாக்கு மூட்டையில் கட்டி வைத்ததாகவும், அதில் மூச்சு திணறி சஞ்சய் இறந்ததால், வாஷிங் மிஷினுக்குள் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தங்கம்மாள் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours