கேரளாவில் 80 வயதுடைய மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியையான மருமகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள எவனும்பள்ளியில் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார் எலியுமா என்ற 80 வயது மூதாட்டி. இவரை பெண் ஒருவர் குழந்தைகள் கண்ணும் முன்னே கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொல்லம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியை கொடூரமாகத் தாக்கியது அவரது மருமகள் மஞ்சுமூல் என்று தெரியவந்தது.
மூதாட்டியின் மகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியையான மஞ்சுமூல் தனது மாமியாரை கடந்த ஓராண்டு காலமாக கொடூரமாகத் தாக்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கணவரையும் அவர் தாக்கி வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மூதாட்டியை மருமகள் தாக்கும் வீடியோவை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். சில ஆண்டுகளாக தனது மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி கூறியிருக்கிறார்.
இதையடுத்து மஞ்சுமூல் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, மஞ்சுமூலை 14 நாட்களில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
+ There are no comments
Add yours