அவிநாசி: சேவூர் அருகே நகைக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய 5 சிறார்கள் உட்பட 15 பேர் கொண்ட பிஹார் மாநில கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவிநாசியை அடுத்த சேவூர் பகுதிக்குட்பட்ட வடுகபாளையத்தை சேர்ந்தவர் சிவகாமியம்மாள் (62). இவரது உறவினர் கிருஷ்ணவேணி. இருவரும் கடந்த வாரம் வீட்டில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கவரிங் மற்றும் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, கவரிங் மற்றும் வெள்ளி நகைகளை சிவகாமியம்மாள் கொடுத்துள்ளார். அதன்பின், தான் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை கொடுத்தபோது, அதனை வாங்கிய இருவரும் தப்பிச் சென்றனர்.
இது குறித்து, சிவகாமியம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கைப்பைகளுடன் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அனைவரும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாகக் கூறி நகை பறிக்கும் கும்பல் என்பதும், அதில் இருவர், சிவகாமியம்மாளிடம் நகையை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்களுடன் தொடர்புடைய 5 சிறார்கள் உட்பட 8 பேரை, அவிநாசி பகுதிகளில் போலீஸார் பிடித்தனர்.
இதையடுத்து, சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பிஹாரை சேர்ந்த அஜய்குமார் (25), அஜய்குமார் (20), புஷியாதவ் (45), பிஷால் குமார் (20), ரவீந்திரகுமார் (25), கிருஷ்ணகுமார் (27), ரஞ்சித் குமார் (26), சோனாகுமார் (22), ஷர்வன் குமார் (20), ராகுல் குமார் (23) மற்றும் 5 சிறார்கள் உட்பட 15 பேரை கைது செய்தனர்.
+ There are no comments
Add yours