சென்னை: பாமகவை தரக்குறைவாக பேசி வரும் திமுக அரசுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் தீவிர சோதனை நடத்திய பிறகு, இந்த மிரட்டல் கடிதம் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் அதிகாரிக்கு இன்று மதியம் தபால் மூலமாக ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்த பார்த்த நிலைய அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். அதில், மதுராந்தகம் தாலுகா புக்கத்துறை கிராமம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவரிடம் இருந்து இந்தக் கடிதம் வந்திருந்தது. அதில், பாமகவை தரக்குறைவாக பேசிவரும் திமுக அரசுக்கும், கட்சிக்கும் ஒரு பாடமாக கருதி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, ரயில்வே போலீஸாருக்கு நிலைய அதிகாரி தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், ரயில்வே போஸீஸார், ஆர்.பி.எஃப் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நுழைவு வாயில்கள், மக்கள் கூடும் இடங்கள், காத்திருப்போர் அறை என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதுதவிர, ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள பார்சல்கள், பயணிகளின் உடைமைகளையும் தீவிர சோதனை செய்தனர்.
சோதனை முடிவில், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை ரயில்வே போலீஸார் உறுதி செய்தனர். இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள கடிதத்தில் வந்துள்ள முகவரி உண்மையா என்று விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், மேகநாதன் என்பவர் தபால் நிலையத்தில் வேலை செய்வதும், அவருடைய பெயரில் வேறு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரிய வந்தது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours