நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

Spread the love

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி சென்ற மாணவர்களை அடித்து, ஓட்டுநர், நடத்துநரை தகாத வார்த்தையால் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை கண்ட பெண் ஒருவர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் தகாத வார்த்தையால் திட்டியதுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடித்து பேருந்தில் இருந்து இறக்கி விரட்டி அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து பேருந்து, ஓட்டுநர் சரவணன் தகாத வார்த்தையால் பேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாங்காடு போலீஸார் அரசு பேருந்தை வழிமறித்து மாணவர்களை தாக்கிய பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சின்னத்திரை நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும், பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து நடிகை ரஞ்சனா நாச்சியார் மீது மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், தலைமையிலான பெண் போலீஸார் நடிகை ரஞ்சனாவை கைது செய்ய வேண்டி கிருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது நடிகை ரஞ்சனாவின் பெற்றோர் அவர் வீட்டில் இல்லை என கூறியதாக தெரிகிறது.

பின்னர் அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீஸார் அவரை கைது செய்ய முயன்ற போது நடிகை கைது வாரண்ட், எஃப் ஐ ஆர் நகல்கள் இருக்கா என போலீஸாரிடம் கேட்டுள்ளார். அதற்கு போலீஸார் அனைத்தும் காவல்நிலையத்தில் இருப்பதாக கூறி அவரை கைது செய்தனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, ரஞ்சனா தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, 40 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் காலையும், மாலையும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours