சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டியைக் கொலை செய்து தங்கநகைகளைத் திருடி, உடலைக் கால்வாயில் வீசி விட்டுச் சென்ற கணவன் மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர், மயிலை சிவமுத்து தெருவில் உள்ள வீட்டில் விஜயா (70) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விஜயா அவரது மகள் லோகநாயகி ஆகியோர் சித்தாள் வேலை செய்து வந்தனர். ஜூலை 17ம் தேதி லோகநாயகி வேலைக்குச் சென்ற சமயத்தில், விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். லோகநாயகி வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, விஜயாவை வீட்டில் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து லோகநாயகி எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண் காணவில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விஜயாவின் வீட்டு வளாகத்தில் வாடகைக்கு வசித்து வந்த சங்கீதா மற்றும் அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர் சில நாட்களாக வீட்டை பூட்டிவிட்டு சென்றதும், செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்திருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீஸார் பார்த்திபன் மற்றும் சங்கீதாவை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், பார்த்திபன் சங்கீதா தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் பொருளாதார சிரமம் இருந்த நிலையில், விஜயா தனது சுருக்குபையில் அதிக பணம் வைத்துள்ளதையறிந்த கணவன் மனைவி இருவரும், கடந்த 17-ம் தேதி மதியம் வீட்டில் விஜயா தனியாக இருப்தையறிந்து, வீட்டிற்குள் நுழைந்து விஜயாவின் சுருக்குப்பையை எடுத்துள்ளனர்.
இதனை விஜயா பார்த்துவிடவே, இருவரும் சேர்ந்து விஜயாவை காலால் உதைத்து, கழுத்தை மிதித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச்சங்கிலி, கம்மல் மற்றும் சுருக்குப்பையில் வைத்திருந்த பணம் ரூ.20,000 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, விஜயாவின் உடலை தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்று சாக்கு பையில் கட்டி வைத்தனர்.
மறுநாள் (ஜூலை18) அதிகாலை பார்த்திபனும் சங்கீதாவும் விஜயாவின் உடல் சாக்குப்பையை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்று சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையிலுள்ள பாலத்தின் கீழே உள்ள கால்வாயில் வீசிச் சென்றுள்ளது என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காணவில்லை என்ற வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு பார்த்திபன், அவரது மனைவி சங்கீதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விஜயாவிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், ரூ.8,000/ மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பார்த்திபன் கூறிய கால்வாயில் இருந்து சாக்கு மூட்டையில் இருந்த விஜயாவின் உடலும் கைப்பற்றப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் பார்த்திபன் மற்றும் சங்கீதா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
+ There are no comments
Add yours