மதுரை: மதுரை மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த போலீஸாரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். தலைமைக் காவலர் ராஜ்குமார் விருநகர் மாவட்டம் திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையம் பகுதி அருகில் உள்ள மண்டேலா நகர் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த நபர் காவலரிடம் வழி விடவில்லை என கூறி தகராறு செய்துள்ளார்.
ஊருக்கு செல்வற்கு கையில் உடைமைகளை வைத்திருந்ததால், ‘ஏன் அவசரப்படுகிறாய்?’ என ராஜ்குமார் கூறியதை அடுத்து ராஜ்குமாருக்கும் ஆறுமுகத்திற்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரின் கழுத்து மற்றும் இடுப்பில் குத்தியுள்ளார். காயமடைந்த காவலரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சோழங்குருணியைச் சேர்ந்த வீரமலை என்பவரின் மகன் ஆறுமுகம் (39) என்பவரைக் கைது செய்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஆறுமுகம் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
+ There are no comments
Add yours