சென்னை: போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக துரைப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் அதே பகுதி 200அடி சாலை பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் 4 பேரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் தனியாக அழைத்துச் சென்று உடைமைகளை சோதித்தபோது 6 கிராம் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருள் அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்திருந்ததாக சென்னை திருமங்கலம் லோகேஷ் (24), கடலூர் மாவட்டம் தேவநாதன் (27), கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ராஜேஷ் (24), வேளச்சேரி ஆலன் கிரிகெரி (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில், “போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். மேலும், போதைப் பொருட்களை கடத்தும், பயன்படுத்தும், விற்பனை செய்யும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால், 7871078100என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.
+ There are no comments
Add yours