சென்னை: செர்பியாவில் ‘டேட்டா என்ட்ரி’ வேலை எனக்கூறி சைபர் மோசடி வேலைக்காக தமிழர்களை அனுப்பிய 3 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணி இருப்பதாக சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர், ஆண்டனி மற்றும் ஷோபா ஆகியோர் விளம்பரம் செய்துள்ளனர். இதை அறிந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர், அந்த வேலைக்காக ரூ.3 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து, ஒரு வருடமாக காத்திருந்துள்ளார். பின்னர், 2022ம் ஆண்டு லாவோஸ் நாட்டின் டிரைஆங்கில் பகுதியில் வேலை இருப்பதாகக் கூறி, சங்கர் சர்காரை அங்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சீன நாட்டு நிறுவனத்தில் அவர் 2 ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்த நிலையில், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் அறிமுகம் அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், சீன நிறுவனத்தில் சைபர் மோசடி வேலை செய்வதற்கு, ஆட்களை கொண்டுவந்தால், கமிஷன் வழங்குவதாக சங்கர் சர்காரிடம், ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். உடனடியாக, சங்கர் சர்கார், சென்னையைச் சேர்ந்த அப்துல்காதரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, திருச்சியைச் சேர்ந்த தனது நண்பரான ஏஜென்ட் சையது என்பவரை அப்துல் காதர் தொடர்பு கொண்டு, அவர்மூலம் டேட்டா என்ட்ரி வேலை எனக் கூறி 9 பேரை லாவோஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு 5 பேரிடம் மட்டும் குடியேற்ற அனுமதிக்காக எனக்கூறி மொத்தம் ஆயிரம் டாலரை சங்கர் சர்கார் வசூல் செய்துவிட்டு, அவர்களை ஜேம்ஸிடம் ஒப்படைத்து, அவரிடம் இருந்து 2 ஆயிரம் சீன கரன்சிகளை கமிஷன் தொகையாகப் பெற்றுள்ளார்.
பின்னர், ஜேம்ஸ் அவர்களைக் கட்டாயப்படுத்தி, சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், இதில் பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சையது, அப்துல் காதர் ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து, சங்கர் சர்காரை தேடி வந்த நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி லாவோஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற, அவரை, கொல்கத்தா விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்து, நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+ There are no comments
Add yours