திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் மதிமுக நகரச் செயலாளர் மகன் இடப்பிரச்சினை தொடர்பாக பேசச் சென்ற போது, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி மதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் மோகன். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக மன்னார்குடி சாலையில் இடம் ஒன்று உள்ளது. இதன் அருகே, சிங்களாந்தியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் இறந்து விட்டார்.
இந்த நிலையில், இந்த லேத் பட்டரையை அவரது மகன் ஸ்ரீராம் (20) நிர்வகித்து வருகிறார். இவருக்கும் மதிமுக நகரச் செயலாளர் தீபம் மோகனின் மகன் அருள்பிரகாஷ் (48) என்பவருக்கும் இடையே நேற்று இடத்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீராம் அவரது பெரியப்பா மகன் முருகேசன் (28) மற்றும் சிலரும் சேர்ந்து அருள்பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருள் பிரகாஷை செங்கல்லால் அடித்து தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நிகழ்விடத்திலேயே அருள்பிரகாஷ் மயங்கி விழுந்தார்.
பின்னர் அங்கு இருந்தவர்கள் அருள்பிரகாஷை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அருள்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 2 மணி அளவில் உயிரிழந்தார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகேசனையும், ஸ்ரீராமையும் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
+ There are no comments
Add yours