தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.28 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ போதை பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது, பீடி இலை, கஞ்சா உள்ளிட்டவை பிடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி திரேஸ்புரம் வடபகுதியில் உள்ள கடற்கரையில் 3 பேர் சந்தேகமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் படகுக்காக காத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
அதில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 56 பாக்கெட்டுகள் இருந்தன. இதில் மஞ்சள் நிறத்தில் அல்வா போன்ற பொருள் இருந்தது. இதனை கைப்பற்றி போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது, அது கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் ‘சாரஸ்’ போதை பொருள் என்பது தெரியவந்தது. இந்த “சாரஸ்’ கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 56 கிலோ சாரஸ் போதை பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அமல்ராஜ் (46), தெர்மல் நகர் கேம்ப்-2 சுனாமி காலனியை சேர்ந்த நிஷாந்தன் (32), கோயில்பிள்ளை விளையை சேர்ந்த இன்பென்ட் விக்டர் (31) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், சாரஸ் போதை பொருளை ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு கடத்தி வந்துள்ளனர்.
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சாரஸ் போதை பொருளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சாரஸ் மற்றும் பிடிபட்டவர்களை தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
+ There are no comments
Add yours