நாகப்பட்டினம்: நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆதரவற்ற 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட் டுள்ளார்.
நாகையில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமி கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த காப்பகத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்னர், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக, அன்னை சத்யா காப்பகத்தில் உள்ளஅனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, மனநல ஆலோசனை வழங்க நாகை பெருமாள் கோயில் கீழ வீதியைச்சேர்ந்த சத்யபிரகாஷ் (44) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் காப்பகத்தில் உள்ளசிறுவர், சிறுமிகளுக்கு மனநலஆலோசனை வழங்கி வந்தார்.
இந்நிலையில், சிறுமிகளுக்கு சத்யபிரகாஷ் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, காப்பக கண்காணிப்பாளர் சசிகலா, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில், காப்பகத்தில் உள்ள 5 சிறுமிகள், தங்களுக்கு சத்யபிரகாஷ் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிவித்துஉள்ளனர்.
போக்சோ சட்டத்தில்… இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சத்யபிரகாஷை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டசத்யபிரகாஷ், நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
+ There are no comments
Add yours