சிவகங்கை: சிவகங்கையில் ரூ.18,000 லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கோலாந்தியைச் சேர்ந்த ராணுவ வீரர் அற்புதம். அந்தமானில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு சிவகங்கை அருகே அன்னை ஜோகன் நகர் என்ற இடத்தில் 3 வீட்டு மனைகளை வாங்கினார். அவற்றை சிவகங்கையில் திருப்பத்தூர் சாலையில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகம் எண்-1-ல் பத்திரப் பதிவு செய்தார். இந்நிலையில் அந்த 3 மனையிடங்களுக்கும் பட்டா கேட்டு வருவாய்த் துறையில் விண்ணப்பித்தார்.
அப்போது பத்திரப் பதிவு ஆவணங்களை சரி பார்த்தபோது, 2 மனையிடங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. தவறுதலாக ஒரு மனையிடம் பதிவாகாமல் இருந்தது. இதையடுத்து மீண்டும் திருத்தப் பத்திரம் பதிவு செய்ய பத்திர எழுத்தர் கண்ணனை அணுகினார். அவர் திருத்தப் பத்திரம் பதிவு செய்ய சார்-பதிவாளர் ஈஸ்வரன் ரூ.18,000 கேட்பதாக கூறினார். இது குறித்து அற்புதம் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார்.
போலீஸார் யோசனைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.18,000 பேருந்து பத்திர எழுத்தர் கண்ணனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் கையும் களவுமாக கண்ணனை பிடித்து கைது செய்தனர். அவரது தகவலின் அடிப்படையில் சார்-பதிவாளர் ஈஸ்வரனையும் கைது செய்தனர்.
+ There are no comments
Add yours