கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இரு இளைஞர்கள் மீது, இரு இளைஞர்கள் பட்டாக்கத்தி, இரும்பு ராடால் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி – பெத்திக்குப்பம் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமை சேர்ந்தவர் பத்மநாபன் (29). இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள தன் வீட்டில் இருந்த பத்மநாபனை, முகாமை சேர்ந்த கிருஷ்ணராஜ், சரத் ஆகிய இரு இளைஞர்கள் இரும்பு ராடால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க வந்த பத்மநாபனின் அண்ணன் பால்ராஜ் (31) என்பவரையும் அந்த இளைஞர்கள் பட்டாக்கத்தி, இரும்பு ராடு மற்றும் கற்களால் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பத்மநாபன் மற்றும் பால்ராஜ் ஆகிய இருவரும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து, அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் தொடர்பாக கிருஷ்ணராஜ், சரத் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பத்மநாபன் மற்றும் பால்ராஜ் மீது, கிருஷ்ணராஜ், சரத் ஆகிய இரு இளைஞர்கள் நடத்திய தாக்குதல் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours