ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவியும் தற்கொலை !

Spread the love

சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பிரவீன் என்ற இளைஞர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி ஷர்மி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி; இவரது மகன் பிரவீன் (26). இவர் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மி (24) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஷர்மியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்று மது அருந்தியபோது ஷர்மியின் அண்ணன் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் திடீரென விடுதிக்குள் நுழைந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பிரவீனை அருகிலிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீஸார் பெண்ணின் அண்ணன் உட்பட 5 பேரை கைது செய்திருந்தனர்.

கணவரை இழந்த சோகத்தில் வாழ்ந்து வந்த ஷர்மி, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது, பிரவீனின் பெற்றோர் ஷர்மியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுயநினைவு இல்லாமல் இருந்த ஷர்மி உயர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன்பு ஷர்மி எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தனது பெற்றோரான துரை குமார் சரளா மற்றும் மற்றொரு சகோதரரான நரேஷ் ஆகியோர்தான் என்றும், தனது கணவர் இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்றும், தற்கொலைக்குப் பின்னர், பிரவீனுடன் ஒன்றாக சேர்ந்து வாழப் போவதாகவும் அதில் எழுதியுள்ளார்.

இந்நிலையில், இந்த மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயிரிழந்த ஷர்மியின் மாமனார் மற்றும் மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஷர்மியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் இருந்து வருகிறது. காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours