குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் திருப்பத்தூர் நகரம்

Spread the love

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகர பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து வருவதால், நகரப் பகுதியில் வாகன திருட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல் துறையினரால் எளிதாக அடையாளம் காண முடியவில்லை. இதனால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இது மட்டுமின்றி திருப்பத்தூரைச் சுற்றி 35-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன.

இந்த கிராம ஊராட்சிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், பேருந்து நிலையம், வங்கிகள், நீதிமன்றம், வனத்துறை அலுவலகம், பூங்கா, தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வாகன திருட்டு, வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற குற்றச்செயல்கள் சமீப காலமாக நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காவல் துறையினர் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து வருவதால் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண முடியாமல் காவல் துறையினர் தவிப்பதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு அது சாதகமாக அமைந்து விடுவதாக மக்கள் தங்களது குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இதுகுறித்துத் திருப்பத்தூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை யொட்டியே பெரும் பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வரும் மக்கள் தங்களுக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களை அரசு அலுவலகங்கள் முன்பாக நிறுத்திவிட்டு தங்களது வேலை காரணமாக அரசு அலுவலகங்களுக்குள் செல்கின்றனர்.

உள்ளே சென்று திரும்பும் சிறிது நேரங்களில் அங்கே நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அவ்வப்போது திருடு போகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் வாகனங்கள் கூட திருடுபோகும் நிலை திருப்பத்தூரில் தொடர்ந்து வருகிறது. அரசு அலுவலகத்தில், அரசு ஊழியர்களின் நேரடி பார்வையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொது மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

திருப்பத்தூர் பேருந்து நிலையம், வாணியம்பாடி சாலை, புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை சாலை, திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அதில் பல கேமராக்கள் செயலிழந்துள்ளன.

இதனால், பட்டப்பகலிலேயே பொது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங் களிலேயே வாகன திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர். திருப்பத்தூர் நகர பகுதியில், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். குறிப்பாக பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், வனத்துறை, காவல் நிலையங்கள் அருகே நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சுழல் கேமராக்களை பொருத்த வேண்டும்.

திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகம், டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நகரில் நடைபெறும் நிகழ்வுகளை காவல் துறையினர் தினசரி கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், வாகன திருட்டு, போக்குவரத்து விதிமீறல்கள், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் படிப்படியாகக் குறையும்’’ என்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் நகராட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து கேமராக்களும் செயலிழக்கவில்லை. ஒரு சில இடங்களில் கோளாறு உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் பங்களிப்புடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் காவல் துறை சார்பில் ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

திருப்பத்தூர் நகர பகுதியில் குற்றச்செயல்களை தடுக்க தினசரி காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாகன திருட்டு தொடர்பாக வரப்பெற்ற புகார் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில் கூட வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours