ஶ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை (என்.ஹெச்.744) பணிகள் திருமங்கலம் – ராஜபாளையம் இடையே இரு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை தற்போது உள்ள சாலையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிக்கு ஊழியர்கள் சென்றபோது, பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து, பாலம் பணிக்குச் சென்றவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து பார்த்த போது, தண்ணீருக்குள் மேலும் ஒருவர் பைக்குடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், தகவலறிந்து வந்த நத்தம்பட்டி போலீஸார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜெயபிரகாஷ் (20), கிருஷ்ணமூர்த்தி (19) ஆகியோர் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு தேனியில் இருந்து பைக்கில் வந்துள்ளனர்.
நான்கு வழிச்சாலையில் பயன்பாட்டிற்கு வராத புதிய சாலையில் அவர்கள் வந்தபோது, நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக அவர்களின் பைக் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காலையில் பணியாளர்கள் வேலைக்கு வந்த பின்பே, இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.” என்று போலீஸார் கூறினர்.
+ There are no comments
Add yours