செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆரா முதன் (வயது 54). இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தார். இதன்பிறகு, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மேலும், அப்பகுதியில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார்.
படுகொலை
இந்நிலையில், வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் உள்ள பெருமாள் கோயில் எதிரே, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி இரவு தனது காரில் ஆராமுதன் சென்றுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஆராமுதன் அவருடன் வந்த 2 பேருடன் சாலை ஓரத்தில் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது காரில் வேகமாக வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆராமுதனை சுற்றி வளைத்து அவரை சரமாரியாக வெட்டினர். அவரது காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆராமுதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், ஆராமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கைது
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கடந்த 1 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆம் தேதி மேலும் 4 பேர் சரணடைந்தனர். சரணடைந்த சிறுவனை தவிர மற்ற 8 பேரையும் ஓட்டேரி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் மீண்டும் 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), வண்டலூர் ஸ்டாலின் தெருவை சேர்ந்த முகிலன் (21), வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தீபக்ஸ்ரீ ராம் (21) வண்டலூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த சேதுராமன் (21), ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்துள்ளார்கள்.
திட்டம்
இதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் விசாரணையில், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியும், தி.மு.க காட்டாங்குளத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான முத்தமிழ்செல்வி (50) மற்றும் அவரது கார் ஓட்டுனர் துரைராஜ் (37) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், தி.மு.க பிரமுகர் ஆராமுதனை கொலை செய்வதற்காக 20 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு அட்வான்சாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக கொலை செய்தவர்கள் தெரிவித்த நிலையில், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம், 6 செல்போன்கள், ஒரு கார் மற்றும் கத்திகள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், ஆராமுதன் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான முத்தமிழ்செல்வி மற்றும் அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் ஆகிய இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பழிக்குப் பழி
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ், வண்டலூர் பகுதியில் பிரபல தொழிலதிபராக இருந்து வந்தார். தி.மு.க-வில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வண்டலூர் ஊராட்சி (தனி) பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவி முத்தமிழ்செல்வி போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, விஜயராஜ் மர்ம கும்பலால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் ஆராமுதன் பெயரும் அடிபட்டது. ஆனால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், தனது கணவரின் படுகொலைக்கு 8 ஆண்டுக்குப் பின் பழிக்கு பழி வாங்கியுள்ளார் விஜயராஜ் மனைவி முத்தமிழ் செல்வி. தி.மு.க நிர்வாகி ஆராமுதனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், அதைச் செய்ய கூலிப் படையை ஏவி விட்டதாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours