ஓசூரில் கடன் திருப்பிக் கொடுக்க முடியாமல் தலைமறைவானவரை கடத்திய பாஜக பெண் நிர்வாகிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி உப்கார் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்(54). இவர் பஸ்தி பகுதியில் நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர், ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த ப்ரியா(30) என்பவரிடம் 11 லட்சம் ரூபாயும், மேலும் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மங்களா(38) என்பவரிடம் 2 லட்சம் ரூபாயும் வட்டிக்கு கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது
தொழில் நஷ்டத்தால் கடந்த 3 மாதங்களாக இரண்டு பாஜக பெண் நிர்வாகிகளுக்கும் வட்டி, அசல் எதும் செலுத்தாமல் மாதேஷ் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அவர் நேற்று சாமி கும்பிட வந்துள்ளார். இதையறிந்த மங்களா மற்றும் அவரது கணவர் தாசப்பா ஆகியோர், மாதேஷை இருசக்கர வாகனத்தில் சுண்ணாம்புக்கார தெருவிற்கு கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த, பாஜக பிரமுகர் ப்ரியா தனது கணவர் ஆனந்துடன் வந்து பணத்தைக் கேட்டு மாதேஷை தாக்கியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து பாஜக இளைஞரணி மாநில செயலாளர் கிஷோர்(26) உட்பட 3 பேர் மாதேஷை ஒசூர் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்று உடனடியாக பணத்தை தர வேண்டுமென மிரட்டியதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பிய மாதேஷ் ஓசூர் நகர போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பாஜக பெண் நிர்வாகிகளான ப்ரியா, மங்களா மற்றும் பிரியாவின் கணவர் ஆனந்த், மங்களாவின் கணவர் தாசப்பா ஆகிய 4 பேரை ஒசூர் நகர போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கிஷோர் உள்ளிட்ட மூவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours