மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டலுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு வடிவங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
100 சதவீத வாக்குப்பதிவு கோரி, புதுவிதமான சலுகைகளையும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, 19 ஆம் தேதியன்று, ஓட்டுப்போட்டால், மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, ஏப்ரல் 19 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்து விட்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கு சாப்பிடச் செல்லும் வாக்காளர்கள், தங்கள் விரலில் மைல் இடப்பட்டிருப்பதைக் காட்டினால், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் 100% வாக்குப் பதிவானதை அனைத்து வாக்காளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது, மாவட்ட மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
+ There are no comments
Add yours