இறந்து 2 நாட்கள் ஆன பசுமாட்டின் இறைச்சியில் சமையலா?!

Spread the love

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆகாச மாரியம்மன் கோவில் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை ஆய்வு செய்தபோது, இறந்து 2 நாட்கள் ஆன பசுமாட்டை கோரைப்புற்களை போட்டு மறைத்து கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அப்போது இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வாகனத்தில் வந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதைதொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும், இயற்கையாகவோ அல்லது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் மாடுகளை கொண்டுச்சென்று சுற்றுவட்டாரத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

அதைதொடர்ந்து, நாச்சியார் கோவில் காவல் துறையினர் கும்பகோணம் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அலட்சியமாக அங்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மாட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.

கும்பகோணத்தில் எந்தெந்த ஹோட்டல்களுக்கு உயிரிழந்த மாட்டின் கறி விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்விற்கு பிறகு உயிரிழந்த மாட்டை புதைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீட்டில் அசைவ உணவு சமைக்காத பெரும்பாலோனோர் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலான கடைகளில் நாய்கறி சமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில கடைகளில் காக்கா கறி, பூனை கறி கூட சமைக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. கோவில் நகரமான கும்பகோணத்தில் ஹோட்டல்களில் இறந்த பசுவை கறி சமைக்க கொண்டு சென்ற சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours