மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ப்ரீ கேஜி முதல் 2ம் வகுப்பு வரை புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதை மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ள மும்மொழி கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
2024-25 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், சில பள்ளிகள் மாணவர் சேர்க்கையை இப்போதே துவங்கி உள்ளன. இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ப்ரீ கேஜியில் மாணவர்களை சேர்க்க 3 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் எனவும் எல்கேஜிக்கு 4 வயதும், யூகேஜிக்கு 5 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. முதல் வகுப்பில் சேர வேண்டும் எனில் மாணவர்களுக்கு கட்டாயம் 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 3,4,5 ஆகிய வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புதிய கல்விக்கொள்கையின் படி 1 முதல் 5ம் வகுப்பு வரை தாய்மொழியில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அங்கன்வாடி அல்லது கேஜி வகுப்புகளும், 12 ஆண்டுகள் வழக்கமான கல்வியும் பயில வேண்டும்.
இந்தியாவில் கடந்த 1948ம் ஆண்டு முதல்முறையாக கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2020ம் ஆண்டு வரை 8 முறை கல்விக்கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours