நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்தது.
இந்த ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி,எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், மார்ச் 9 ஆம் தேதி தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை நீட்டிக்குமாறு தேர்வு நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையை மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்குப் பின்னால் உள்ள முதன்மைக் காரணம், விண்ணப்ப இணையதளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் தொடர்பான சிக்கல்கள் ஆகும். நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பில், ஆதார் எண்ணை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர், விண்ணப்பம் மற்றும் உள்நுழைவு செயல்முறையின் போது ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இது ஆதார் அட்டை இல்லாத அல்லது ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க அல்லது பதிவு எண்ணைப் பெறுவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம் (ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில்), மொபைல் சரிபார்ப்பு OTP அல்லது பிற தொடர்புடைய அம்சங்களைப் பெறுவதில் விண்ணப்பதாரர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்கள் நீட் 2024 விண்ணப்ப செயல்முறையின் கடைசி தேதியை நீட்டிக்க தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, நீட் 2024 தேர்வர்களுக்கான ஆதார் எண்கள் தொடர்பான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இருப்பினும், சிலருக்கு இன்னும் பிரச்சனை நீடிக்கிறது. மேலும், சரியான விவரங்களை உள்ளீடு செய்தாலும் கேப்ட்சா செல்லாது எனக் குறிப்பிடப்பட்டதால், உள்நுழைவதில் விண்ணப்பதாரர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, நீட் 2024 விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை தேசிய தேர்வு முகமை நீட்டிக்கும் என எதிர்பார்க்கலாம். எவ்வாறாயினும், தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் உடனடியாகச் செயல்படவும், தேவையானதைச் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
+ There are no comments
Add yours