சென்னை: பத்தாம் வகுப்புக்கான ஆங்கில பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையும் நடந்து முடிந்தன. இதையடுத்து, 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நல்ல மதிப்பெண் கிடைக்கும்: இந்நிலையில், ஆங்கில பாடத் தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 மையங்களில் 9.10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
ஆங்கில பாடத் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஆங்கில வினாத்தாளில் 1 முதல் 5 மதிப்பெண் வரை அனைத்து பகுதிகளிலும் நன்கு தெரிந்த கேள்விகளே இடம்பெற்றிருந்தன. அதனால், மாணவர்கள் எளிதாக நல்ல மதிப்பெண் பெற முடியும்’’ என்றனர்.
16,550 பேர் வரவில்லை: ஆங்கில பாடத் தேர்வை எழுத 9 லட்சத்து 21,578 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 9 லட்சத்து 5,028 மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். அதாவது, 15,433 பள்ளி மாணவர்கள், 1,117 தனித்தேர்வர்கள் என மொத்தம் 16,550 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித் துள்ளது.
அடுத்து, கணித பாடத் தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி நடக்க உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours