போர்ன்விட்டா வரிசையில் ’ஆரோக்கிய பானம்’ என்ற அடையாளத்தை இழந்துள்ளது ஹார்லிக்ஸ்.
இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் ஹார்லிக்ஸ், பூஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பானங்களை தயாரித்து வருகிறது. ஆரோக்கிய பானம் என்ற அடையாளத்தின் கீழ் அழைக்கப்பட்ட ஹார்லிக்ஸ் தற்போது அந்த அடையாளத்தை இழக்கிறது. இதன்படி ஆரோக்கிய பானம் என்பதிலிருந்து ‘செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள்’ என்ற வகைமைக்கு பெயர் மாறுகிறது.
முன்னதாக ‘ஆரோக்கியமான பானங்கள்’ பிரிவில் இருந்து குறிப்பிட்டவற்றை நீக்குமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இ-காமர்ஸ் தளங்களை கேட்டுக் கொண்டது. அதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ் திவாரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்துஸ்தான் யூனிலிவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, ’செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்கள்’ என்பது, புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை பூர்த்தி செய்கிறது. ஒரு தாவரம், விலங்கு, கடல் அல்லது நுண்ணுயிர் மூலத்திலிருந்து, ஏதேனும் உயிர்ச் செயலில் உள்ள கூறுகளைச் சேர்ப்பதன் மூலம் கூடுதல் ஆரோக்கிய பலன்களை வழங்கும் மது அல்லாத பானமாக இந்த ’செயல்பாட்டு ஊட்டச்சத்து பானங்களை’ வரையறுக்கலாம்.
முன்னதாக போர்ன்விடா பானத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது குறித்து கவலைகள் எழுந்ததை அடுத்து, அது ஆரோக்கிய பானம் என்ற அடையாளத்தை இழந்தது. ’ஃபுட் பார்மர்’ என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் இதற்கான சர்ச்சையை முதலில் கிளப்பினார். போர்ன்விட்டா ஒரு ஆரோக்கிய பானமே அல்ல என்றும், அதில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அவற்றை அருந்தும் குழந்தைகளுக்கு மிகைபருமன் முதல் டைப் 2 நீரிழிவு வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பாகும் என்று எச்சரித்தார்.
இதனை கடுமையாக மறுத்த காட்பரீஸ் போர்ன்விட்டா, இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்தது. இதனையடுத்து, பொதுவெளியில் மன்னிப்பு கோருவதாக அறிவித்த ‘ஃபுட் ஃபார்மர்’ தனது வீடியோவை நீக்குவதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் உருவாக்கிய பொறி பெரு நெருப்பாக வளர்ந்தது.
கடைசியில் போர்ன்விட்டாவை ஆரோக்கிய பானங்கள் என்ற வகையிலிருந்து நீக்குமாறு, இ-காமர்ஸ் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, போர்ன்விட்டாவும் அதிகாரபூர்வமான ஆரோக்கியபானம் என்ற அடையாளத்தை துறந்தது. இந்த வரிசையில் தற்போது ஹார்லிக்ஸும் இணைந்திருக்கிறது. மேலும் பல ஆரோக்கிய பானங்கள் விரைவில் இணையும் என்றும் எதிர்பார்க்கலாம்.
+ There are no comments
Add yours