உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் பெண்களை விட ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. முக்கியமாக திருமணமான பின், 30 வயதை அடைந்த ஆண்கள் பணம் சம்பாதிப்பதில் காட்டும் அக்கறை அளவில் கூட, தங்கள் ஆரோக்கியத்தில் காட்டுவதில்லை என்று கூறலாம்.
இப்படி ஆண்கள் அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் காரணம். அதுமட்டுமின்றி ஆண்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகாமல் தவிர்த்து, முடிந்தவரை அதை வெளிக்காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்கின்றனர்.
இப்படி மறைக்கும் போது, அதன் விளைவாக நோய் முற்றி, பின் சிகிச்சை அளிப்பதே கடினமாகிவிடும். இப்போது 30 வயதிற்கு பின் ஆண்கள் எந்த ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
30 வயதை எட்டிய ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தையோ, சிறுநீர் நிறத்தில் மாற்றத்தையோ அல்லது சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையின் மாற்றத்தையோ கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் , உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அவை உடலில் உள்ள பிரச்சனையின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். உதாரணமாக, சிறுநீரில் இரத்தக்கசிவு தென்பட்டால், அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது சிறுநீரக கல்லின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். அதேப் போல் அடிக்கடி சிறுநீர் கழித்தால், சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக பாதை தொற்று, சர்க்கரை நோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
நெஞ்சு பகுதியில் அசௌகரியத்தை, அதாவது வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், இதயத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நெஞ்சு பகுதி மற்றும் தோற்பட்டை பகுதியில் கூர்மையான வலியை சந்தித்தால், அது கார்டியாக் அரெஸ்ட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதுவும் இப்படியாக அசௌகரியத்தை சில நாட்கள், வாரங்கள் சந்தித்து வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். “
ஆண்கள் பொதுவாக தங்களின் அந்தரங்க பகுதியில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மற்றவர்களுடன் பேச தயக்கம் கொள்வார்கள். உடலின் பிற பகுதியில் சந்திக்கும் பிரச்சனைகளை கூட உடனே சரிசெய்ய முயற்சிக்காவிட்டாலும், பிறப்புறுப்பில் பிரச்சனைகளை சந்தித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி என்னவென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அதுவும் பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி கட்டிகள் இருப்பதை உணர்ந்தால், அது புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே எந்த வயதுடைய ஆண்களும் இந்த விஷயத்தில் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயது அதிகரிக்கும் போது ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. இப்பிரச்சனையை கொண்ட ஆண்களால் தங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாது. மேலும் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையானது மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையது. சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள், கட்டுப்பாடற்ற அல்லது கடுமையான சர்க்கரை நோய், குடிப்பழக்கம் அல்லது போதைப் பழக்கம் போன்றவை விறைப்புத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளாகும்.
அதிகப்படியான தாகம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு போதுமான அளவு நீரை அருந்த வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் நீரை தவறாமல் அருந்த வேண்டும். ஒருவருக்கு தாகம் ஏற்படுவது ஒரு பொதுவான ஒன்று. ஆனால் அந்த தாகம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஹைப்பர் கிளைசீமியாவின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எனவே உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்திருந்து, உங்களுக்கு திடீரென்று அதிகளவு தாகத்தை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி என்னவென்று பரிசோதனை செய்து பாருங்கள். சர்க்கரை நோயாக இருந்தால், சரியான வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். “
திடீரென்று ஞாபக மறதி அதிகமாக இருப்பதை உணர்கிறீர்களா? உங்களால் எதையும் சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். முதுமையின் காரணமாக நினைவாற்றல் மந்தநிலையை அனுபவிப்பது பொதுவானது என்றாலும், மூளை தொற்றுகள், சேதம், பக்கவாதம், அல்சைமர் அல்லது டிமென்ஷியா போன்றவற்றாலும் இந்நிலை ஏற்படலாம். சில சமயங்களில் நினைவாற்றல் இழப்பு மற்றும் பிற அறிவாற்றல் சீர்குலைவுகள், வைட்டமின் பி12 குறைபாடு உட்பட ஊட்டச்சத்து குறைபாடுகளின் விளைவாகவும் இருக்கலாம். எனவே இந்த பிரச்சனையை சந்தித்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
+ There are no comments
Add yours