பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், பூப்படைந்ததிலிருந்தே அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் அல்லது சில காலமாகவே அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் ‘இது இயல்பானதுதான்’ என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம் எனவும், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாதவிடாயின்போது அதீத ரத்தப்போக்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மாதங்கி ராஜகோபால் பிபிசி தமிழுக்கு விளக்கினார்.
மாதவிடாய் காலத்தில் எந்த அளவுக்கு ரத்தம் வெளியேறினால் அது அதீத ரத்தப்போக்கு?
அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர். இவ்வளவு ரத்தம் வெளியேறுவது இயல்பானது அல்லது அதனை தாண்டினால் அதீத ரத்தப்போக்கு என்பதற்கு வரையறை கிடையாது. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். சிலர் நாப்கின்கள் சிறிது நனைந்தாலும் மாற்றிவிடுவார்கள், அதுவல்ல அதீத ரத்தப்போக்கு. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான். அதிகமான ரத்தப்போக்கு இருந்தால், ரத்தம் உறைந்து அப்படியே கட்டி கட்டியாக வெளியேறும்.
அதேபோன்று, திருமணமான பெண்களுக்கு 4-5 நாட்கள் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அது இயல்பானது. அதைத்தாண்டி மாதவிடாய் தொடர்கிறது என்றால், அதுவும் அதீத ரத்தப்போக்குதான்.
அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சிலருக்கு கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதிக்குள் இருந்தால் அதன் சவ்வு பெரிதாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். வழக்கமாக 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி என்பது பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களுக்கு 40 நாட்களுக்கும் அதிகமாக இருக்கும். இதனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து கர்ப்பப்பை சவ்வு உள்ளுக்குள் தடிமனாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். இளம்வயதில் அதிகமான ரத்தப்போக்குக்கு பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாக அமைகின்றன.
அதீத ரத்தப்போக்கால் என்ன மாதிரியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும்?
‘பூப்பெய்தியதிலிருந்தே இப்படித்தான் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்’ என சிலர் சொல்வார்கள். அதற்காக அதனை இயல்பானது என எடுத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ச்சியாக ஒருவருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்படுகிறதென்றால், அதனால் அவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படும். ஏனெனில், அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். உடல் சோர்வு, பணிகளை சரிவர செய்ய முடியாதது உள்ளிட்டவை ஏற்படும்.
உணவு மூலம் இதனை சரிசெய்ய முடியுமா?
அதீத ரத்தப்போக்கை குறைப்பதற்கென எந்த உணவும் கிடையாது. பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளுக்கு உணவின் மூலம் உடல் எடையை சரியான அளவில் வைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். அப்போது, இந்த அதீத ரத்தப்போக்கு பிரச்னையும் சரியாகும்.
இரும்புச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் வகைகள், மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகளை உணவின் மூலம் சரிசெய்ய முடியாது.
அதீத ரத்தப்போக்கை குணப்படுத்துவதற்கென சிகிச்சைகள் உண்டா?
இதற்கு நிறைய ஹார்மோன் சிகிச்சைகள் உண்டு. ஃபைப்ராய்டு கட்டிகள் இல்லை, கர்ப்பப்பையில் பிரச்னை இல்லை என்பவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். அதீத ரத்தப்போக்கை குறைப்பதற்கும் மாத்திரைகள் உண்டு.
காப்பர் டி போன்று கர்ப்பப்பையில் காயிலை 5 ஆண்டுகளுக்கு செலுத்தினால் மெதுவாக அந்த சவ்வு மெலிதாகும்போது உதிரப்போக்கு குறையும். இதன்மூலம் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படாது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் அதீத ரத்தப்போக்கு ஏற்படுமா?
உடல் பருமன் இருப்பவர்களுக்கு பிசிஓடி பிரச்னை பெரும்பாலும் ஏற்படுகிறது. அதனால், அதீத ரத்தப்போக்கால் உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களது உடலில் உள்ள கொழுப்பு, அதிகளவு ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. அந்த ஈஸ்ட்ரோஜன் கர்ப்பப்பையை அதிகளவு தூண்டும்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.
அதீத ரத்தப்போக்கு பிரச்னைக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
இளம் வயதினர், நடுத்தர வயதினருக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் இப்பிரச்னை நீடித்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். உடல் சோர்வு, சரிவர வேலை செய்ய முடியவில்லையென்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சிலர் மெனோபாஸ் கட்டத்தை அடைந்தாலும் அதீத ரத்தப்போக்கு திடீரென ஏற்படுவது ஏன்?
மெனோபாஸ் நிலையை அடைந்தும் அதிகமான ரத்தப்போக்கு திடீரென ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். மாதவிடாய் ஓராண்டு காலம் வராமல் இருந்தால்தான் அது மெனோபாஸ் நிலை. அதுவே சில பெண்களுக்கு 6 மாதங்களுக்கு வராமல், பின்னர் மாதவிடாய் ஏற்படும். இப்படி 2-3 ஆண்டுகளுக்குக் கூட நீடிக்கும்.
அப்படி இருப்பவர்களுக்கு ரத்தப்போக்கு அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால், அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாககூட இருக்கலாம். அந்த சமயத்திலேயே பயாப்சி பரிசோதனை செய்து கண்டுபிடித்தால் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க முடியும்.
+ There are no comments
Add yours