குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும். குறட்டை உயிருக்கு ஆபத்தான பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், குறட்டை விடுபவர்களை விட, அவர்களின் அருகில் படுப்பவர்கள் தான் அதிகம் சிரமப்படுவார்கள். குறட்டையானது தூக்கத்தில் சுவாசிக்கும் போது வெளிவரும் சப்தமாகும். சிலர் குறைவான சப்தத்தில் குறட்டை விட்டு தூங்குவார்கள்.
இன்னும் சிலர் அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் அதிக சப்தத்துடன் குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை சப்தம், தூக்கத்தில் வாய் மற்றும் மூக்கின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும் தடைகளால் தொண்டை திசுக்களில் ஏற்படும் அதிர்வுகளின் ஓசையாகும். ஒருவருக்கு குறட்டை பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் உடல் பருமன், மூக்கு அல்லது தொண்டையின் அசாதாரண அமைப்பு, மூக்கடைப்பு, மதுப்பழக்கம், தூக்க நிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.
குறட்டையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒரு எளிமையான வழி தான் உணவுகள். அதுவும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அதிக மருத்துவ குணம் கொண்ட தேன் குறட்டையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? Mirror.co.uk இன் அறிக்கையின்படி, குறட்டை பிரச்சனையால் போராடிக் கொண்டிருப்பவர்கள் தேனை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் உட்கொண்டு வந்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் என தூக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்கு தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் தான் காரணம். இந்த தேனை தொண்டையில் தடவுவதன் மூலம் ஒலிகளை உண்டாக்கும் திசுக்களை அது அமைதிப்படுத்தி, குறட்டை சப்தத்தைக் குறைக்க உதவும். மேலும் இது மூச்சுக்குழாய்களில் உள்ள நெரிசலையும், தொண்டையில் உள்ள வீக்கத்தையும் குறைக்க உதவும். அதற்கு ஒரு ஸ்பூன் தேனை இரவு தூங்கும் முன் அப்படியே சாப்பிடலாம் அல்லது தூங்கும் முன் ஒரு கப் சுடுநீர் அல்லது இஞ்சி டீயுடன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.
அதிக உடல் எடை, குறிப்பாக கழுத்தைச் சுற்றியுள்ள பகுதி அதிகம் வீங்கியிருந்தால், அது சுவாசப்பாதையை சுருக்கி, குறட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே உடல் எடையை கணிசமான அளவில் குறைப்பதன் மூலும், சுவாசப்பாதையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து, குறட்டையும் குறையும்.
தூங்கும் போது ஒரு நேராக அதாவது, முதுகுப் பகுதியில் தரையில் படுமாறு படுக்கும் போது, நாக்கு மற்றும் மென்மையான திசுக்கள் தொண்டையை நோக்கி தள்ளப்பட்டு, சுவாசிக்கும் போது சுவாச ஓட்டத்தில் தடையை உண்டாக்கி, குறட்டையை ஏற்படுத்தும். எனவே குறட்டை வருவதைத் தடுக்க வேண்டுமானால், தூங்கும் போது பக்கவாட்டில் ஒருபக்கமாக திரும்பி தூங்குங்கள்.
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லாமல் இருந்தால், அது காற்றுப் பாதையில் சளியை இறுக்கமடையச் செய்து, குறட்டையை அதிகரிக்கும். எனவே குறட்டை வராமல் இருக்க வேண்டுமானால், போதுமான அளவில் நீரைக் குடியுங்கள்.
மதுப்பழக்கம் தொண்டை சதையை தளர்வடையச் செய்து, காற்றுப் பாதையில் சுவாச ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி குறட்டை சப்தத்தை அதிகரிக்கும். எனவே குறட்டை வராமல் இருக்க வேண்டுமானால், மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
+ There are no comments
Add yours