காபூல்: ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவை ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad) நகரத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பைசாபாத் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் 140 கி.மீ ஆழத்தில், 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும் அதிர்ந்ததால் மக்கள் மிரண்டுபோய் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சேதமடைந்த பொருட்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு அக். 07-ல் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், மேலும் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் புத்தாண்டு தினமான (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
+ There are no comments
Add yours