இன்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏராளமான விமானங்கள் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல பல்வேறு நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு ஏர் பிரான்ஸ் விமானம் இயக்கப்பட இருந்தது. இதில் சுமார் 290 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்த சமயத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .
இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் அதில் பயணம் செய்ய இருந்த 290 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்த பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளும், பிரான்சில் உள்ள தங்கள் மகன்,மகள் உள்ளிட்ட உறவினர்களை சந்திப்பதற்காக கிளம்பிய இந்திய பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
புத்தாண்டு தினத்தில் தங்கள் சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த பயணத்திற்கு காத்திருந்த பயணிகள் தற்போது செய்வதறியாது வேதனையில் உள்ளனர். விமானக் கோளாறு சரி செய்யப்பட்டு நாளை காலை விமானம் புறப்படும் என்று விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours